Friday, March 8, 2013

You are in IT job, உங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க!!!

உங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க!!!


"உங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க" இதை சர்வசாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள். 

ஐ.டி என்பதை அகராதியில் புதிதாகச் சேர்த்தால் "ஆகச் சிறந்த அடிமை முறையை உருவாக்குதல்" என்று சேர்க்கலாம். அமெரிக்காவில் செட்டில் ஆவதும், இங்கிலாந்துக்கு ஆன்சைட் போவதுமாக கனவுகள் விதைக்கப்பட்ட மிடில் கிளாஸ் மாதவன்களை கேம்பஸ் இண்டர்வியூ என்ற பெயரில் கொத்தி வரும் இந்த நிறுவனங்கள் இலட்சத்தில் ஒருவனாக மாற்றுகின்றன. முதன் முதலாக ஐ.டி அலுவலகத்தில் நுழைபவர்களை பார்த்திருக்கிறீர்களா? பளிச் ஷூவும், புதிய சட்டையும், கழுத்தில் டையும், பேச்சில் பதட்டமும், கண்களில் கனவுகளுமாக வந்து சேர்வார்கள். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாக 16 எம்.எம்மில் படம் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் உண்மை குரூரமானது.

கொத்தி வந்த இலட்சத்தையும் மந்தையாக மாற்றும் அடுத்த படலம் 'ட்ரெயினிங்'. இந்த வேலை நிரந்தரமில்லை என்றும் மேனேஜர் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றலாம் என்பதையும் ஆழமாக பதிப்பிக்கிறார்கள். இனி கேள்வியே கேட்கக் கூடாது என்பதுதான் இதில் சொல்லித்தரப்படும் தாரக மந்திரம். இந்த பயிற்சி முடியும் போது கிட்டத்தட்ட மெஷின்களாகியிருப்பார்கள். இந்த மெஷின்கள் காலையிலிருந்து நள்ளிரவு வரை உழைப்பதற்கு தயாராகிவிடும். பட்டினி போடப்பட்ட நாயின் நெற்றிக்கு முன்னால் எலும்புத் துண்டை கட்டித் தொங்கவிடுவது போல பதவி உயர்வு, சம்பள உயர்வு, வெளிநாட்டுப்பயணம் போன்ற துண்டுகளை கட்டித் தொங்கவிடுவார்கள். கிடைக்காத துண்டுகளை பிடித்துவிட நாய்கள் ஓடத் துவங்குகின்றன.

எத்தனைதான் மழை பெய்தாலும் வறட்சிப்பாடலை பாடும் கர்நாடகாவைப் போல, எத்தனைதான் க்ளையண்ட்களை பிடித்திருந்தாலும் மார்ச் மாதத்தில் மட்டும் மேனேஜர்களுக்கு 'ரிஸசன்' ஞாபகத்திற்கு வந்துவிடும். நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்க- (நஷ்டத்தை குறைக்க இல்லை என்பதை கவனிக்க) நாம் இந்த ஆண்டு சம்பள உயர்வை தியாகம் செய்ய வேண்டும் என்று பஞ்சப்பாட்டு பாடுவார்கள். ஒற்றை இலக்க சம்பள உயர்வு கிடைத்தால் ஜென்மசாபல்யம் அடைந்துவிட வேண்டும் ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் தனக்குள் மட்டும் புலம்பிக் கொண்டு அடுத்த வருடம் எலும்புத்துண்டு கிடைக்கலாம் என்று ஓட வேண்டும்.

இடையில் சம்பள உயர்வு கிடைக்காத ஊழியர்களிடம் ஏதாவது தொய்வு தென்படுகிறது என்றால் மனிதவள மேலாண்மையைச் சேர்ந்த லார்டு லபக்குதாஸ்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். ஒவ்வொரு கிளையிலும் கொஞ்சம் பேரை எந்த முன்னறிவிப்புமின்றி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். எங்கே நம்மையும் அனுப்பிவிடுவார்களோ என்று மற்ற அடிமைகளுக்கு ஜெர்க் கொடுப்பதற்கான செயல்பாடு இது. முன்னைவிடவும் அடிமைகளிடம் வேகம் அதிகரித்திருக்கும். மேனஜர்களிடம் குழவ வேண்டியிருக்கும்.

அருகில் இருந்தவனை அனுப்பிவிட்டார்கள்; நல்லவேளையாக நம்மை விட்டுவிட்டார்கள் என்று திருப்திப்பட்டுக் கொள்வார்கள். "நமக்கு பிரச்சினை இல்லாத வரைக்கும் சரி" என்ற இந்த மனநிலைதான் நிறுவனத்திற்கு வெளியேயும் ஐ.டி ஊழியர்களிடம் எதிரொலிக்கிறது. இதே நிலைப்பாடுதான் ஒரு கட்டு கீரை வாங்குவதிலிருந்து வீட்டுவாடகை உயர்வு வரைக்கும் பேரம் பேசத்தெரியாத தன்மையை அல்லது பேரம் பேச பயப்படும் மனநிலை ஐ.டி.வாலாக்களிடம் உருவாக்கிவிடுகிறது. உடல்நலத்தையும், மனநலத்தையும் கெடுத்து பெற்றுக் கொண்ட பணத்தை "ஐ.டிலதானே இருக்கீங்க" என ஆட்டோக்காரரில் ஆரம்பித்து சூப்பர் மார்கெட் வரை உறிஞ்சுவதை எந்தக் கேள்வியும் கேட்காத தைரியமின்மையை இந்த துறை கற்று கொடுத்திருக்கிறது.

ஐ.டி என்றாலே இலட்சக்கணக்கில் சம்பளம் என்பதும் மாயைதான். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பல்லாயிரக்கணக்கான அடிமைகள் இருக்கிறார்கள். பெங்களூரில் ஓடும் ஆட்டோக்காரர்களைவிடவும் குறைவாக சம்பாதிக்கும் ஐ.டி.ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை யாரும் கவனிப்பதில்லை. பல மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் ஐ.டிக்காரர்களை விட அதிகம் என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஒட்டுமொத்த விலையுயர்வும் ஐ.டியால்தான் என்பது போல இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

ஐ.டிக்காரர்களிடம் தங்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம்தான் அவர்களின் அத்தனை சமூக செயல்பாடுகளுக்கும் (Social Behavior ) அடிப்படையான காரணம் என்பது பற்றி யாரும் விவாதிப்பதில்லை. செலவு செய்கிறார்கள் என்பதையும், ஊதாரிகளாகத் திரிகிறார்கள் என்பதையும் இந்தக் கோணத்தில் இருந்தே பார்க்க வேண்டும். உண்மையில் ஒவ்வொரு ஐ.டி ஊழியரிடமும் அவருக்கே தெரியாத பதட்டமிருக்கிறது.

வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மைதான் இவர்களின் கோபமாக மாறிக் கொண்டிருக்கிறது. கோபம் என்றால் சாலையில் உரசிப்போகும் வாகன ஓட்டிகளிடமும், க்யூவில் முந்திச் செல்பவர்களிடமும் காட்டும் கோபம். யாரிடம் கோபத்தை காட்டினால் தனக்கு எந்தப்பிரச்சினையும் வராதோ அவர்களிடம் மட்டும் காட்டும் கோபம். உண்மையில் இந்தக் கோபத்தினால் அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். ஆனால் தங்களின் அத்தனை அழுத்திற்கும் ஒரு வடிகால் வேண்டுமில்லையா?

சாலைகளில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் சண்டையிடுவதை கவனித்திருக்கிறீர்களா? வீட்டில் மற்றவர்களிடம் கோபம் காட்டுவதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? துணிந்து கை நீட்ட முடியாத தைரியமின்மையின் வெளிப்பாடுதான் இந்தச் சண்டைகள்.

உண்மையில் ஐ.டியில் வேலை செய்பவர்கள்- கேள்வி கேட்க துணிச்சலில்லாத, துணிந்து சண்டையிட முடியாத, பலசாலிகளிடம் பம்மும் அப்பிராணிகள். பாவப்பட்ட ஜென்மங்கள். அடுத்த முறை "ஐ.டிலதானே வேலை செய்யறீங்க?" என்ற கேள்வியைக் கேட்காதீர்கள். அது பார்வையற்றவனிடம் "நீ குருடன் தானே" என்று கேட்பதற்கும், பேச முடியாதவனிடம் "நீ ஊமைதானே' என்று கேட்பதற்கும் சமம்.


நன்றி : வா.மணிகண்டன்

http://www.nisaptham.com/search/label/ஐடி%20பூதம்

2 comments:

nerkuppai thumbi said...

I happened to read the blog-post only now. Okay. But how come, there is no comment?

Soni. nivedita said...

If you want to travel with your pet then you need to know about the airlines pet policy here are some website which has information about pet policy the link is mention below:
delta pet policy
alaska pet policy

How to Get files from the directory - One more method

 import os import openpyxl # Specify the target folder folder_path = "C:/Your/Target/Folder"  # Replace with the actual path # Cre...