http://dinamalar.in/pothunewsdetail.asp?News_id=5223&cls=row4&ncat=IN
ஜம்மு: அமர்நாத் கோவில் நிலம் பிரச்னையால், காஷ்மீரில் தொடர்ந்து கலவரமும், வன்முறையும் நீடித்து வரும் நிலையில், ஜம்முவில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்களுக்கு, காஷ்மீரத்து இந்துக் களே பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். சம்பா மற்றும் அக்னூர் பகுதிகளில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், முஸ்லிம்களுக்கு காஷ்மீரத்து இந்துக்களே பாதுகாப்பு அளிப்பது பல்வேறு இடங்களில் காணப் படுகிறது.
டலாப் டல்லியோ நகரில் இரு தெருக்களில் 15க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்துக்களே பாதுகாப்பு அளிக்கின்றனர். இரவு நேரங்களில், இந்துக்கள் ரோந்து சென்று, பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். "இங்கு தனியே வசிக்கும் காஷ்மீர் பெண் கூட, தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்' என்று பெருமிதத்துடன் கூறினார்
நிட்கோ தெருவில் வசிக்கும் அனில் புதியா. இன்னொரு தெருவில் வசிக்கும் அருண் அகர்வால் என்பவர், "மதவெறியர்களை, முஸ்லிம்களை தொடக்கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் இங்கு சகோதரத்துவத்துடன் வசித்து வருகிறோம். எங்களில் யாரையும் புண்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று கூறினார். இல்லத்தரசியாக இருக்கும் சகுந்தலா தேவி என்பவர், முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து பெரிதும் கவலைப்படுகிறார்.
""முஸ்லிம் குடும்பத்தினர் வேறு இடங்களுக்கு குடிபெயர முடிவு செய்தனர். இத்தனை நாளாக ஒன்றாக இருந்த அவர்கள் வேறு இடத்துக்கு போவதை நாங்கள் விரும்பவில்லை. அவர்களை சமாதானப்படுத்தி, தொடர்ந்து இங்கேயே வசிக்க செய்துள்ளோம்'' என்று கூறினார் சகுந்தலா தேவி.
அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அப்துல் ரூப் லோன் என்பவர், ""உண்மைதான். இங்கு 17 முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே உள்ளோம். எங்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் அச்சப்பட்டோம். சில குடும்பத்தினர், பாதுகாப்பான இடத்துக்கு குடிபெயர நினைத்தனர். அவர்களை பக்கத்துவீட்டு இந்துக்கள் சமாதானப்படுத்தி விட்டனர்'' என்று கூறினார். டலாப் டல்லியோவில் வசிக்கும் அப்துல் ரகிம் மாலிக் என்பவர், ""இந்த பகுதியில் பா.ஜ., மிகுந்த பலத்துடன் இருக்கிறது. இரவு நேரங்களில் மத்தளம் முழங்க அவர்கள் அணி வகுத்துச் செல்வர்.
ஆனால், முஸ்லிம்கள் மீது இதுவரை சிறிய தாக்குதல் கூட நடந்தது இல்லை'' என்று கூறினார். ஜம்மு முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவராக உள்ள அப்துல் மஜித், ""இந்த பிரச்னையில் மற்ற கட்சிகளை விட பா.ஜ.,வுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது. சரியான எண்ணம் கொண்டவர்களை அவர்கள் அரவணைத்து செல்லவேண்டும். முஸ்லிம்கள் மீது விரோதம் கொண்ட சிலரால் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.
No comments:
Post a Comment